மாலை முரசு அதிபர் ராமச்சந்திர ஆதித்தன் காலமானார்: ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ இரங்கல்!




ramachandraசென்னை: மாலை முரசு நாளிதழின் நிர்வாக இயக்குநர் ராமச்சந்திர ஆதித்தன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

‘மாலை முரசு’ அதிபர் ராமச்சந்திர ஆதித்தன் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டிலேயே டாக்டர்கள் உதவியுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று காலை 9.30 மணி அளவில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த ராமச்சந்திர ஆதித்தனுக்கு கண்ணன் ஆதித்தன், கதிரேச ஆதித்தன் என்ற இரண்டு மகன்களும், கீதா என்ற மகளும் உள்ளனர்.

பெசன்ட்நகர் மயானத்தில் நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ராமச்சந்திரன் ஆதித்தன் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா

முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,”பிரபல பத்திரிகை அதிபரும், “மாலை முரசு” நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான பா. ராமச்சந்திர ஆதித்தன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (16.10.2013) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.ஜனநாயகத்தின் நான்காவது தூணாக போற்றப்படும் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் ராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கு உண்டு.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை மீட்டெடுப்பதற்காக இவர் ஆற்றிய பங்கினை நான் நன்கு அறிவேன். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், மக்களிடையே நாட்டு நடப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பெரிதும் துணை புரிந்தவர் ராமச்சந்திர ஆதித்தன் அவர்கள். எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான ராமச்சந்திர ஆதித்தன் அவர்களின் மறைவு பத்திரிகைத் துறைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.

ராமச்சந்திர ஆதித்தன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன்,அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,” சி.பா. ஆதித்தனாரின் மூத்தமகன், அருமை நண்பர், பா. ராமச்சந்திர ஆதித்தன் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன். தமிழ், தமிழர்கள், பிற்படுத்தப்பட்டோர் நலன் என்பவற்றில் என்றைக்கும் குறையாத அக்கறையும் ஆர்வமும் கொண்டவர் ராமச்சந்திர ஆதித்தன் என்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

மேலும், என்னை காவலர்கள் நள்ளிரவு நேரத்தில் கைது செய்த போது தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்தவர் ராமச்சந்திர ஆதித்தன்.

அவர் மறைவு, தமிழ்ச் சமுதாயத்திற்கும், பத்திரிகை உலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும், அவருடைய மகன் கண்ணன் ஆதித்தன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், மாலை முரசு இதழில் பணியாற்றும் தொழிலாளத் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தன் தந்தையாரைப் போலவே தமிழ் இனமான உணர்வு கொண்டவராக தமிழ் ஈழ விடுதலை உணர்வாளராகவே வாழ்ந்தார். தமிழர்கள் உரிமைக்காக, தமிழ் ஈழ விடியலுக்காக தனது பத்திரிகையை அர்ப்பணித்தார்.

அவரது மறைவால் துயரத்தில் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், மாலைமுரசு ஏட்டின் செய்தியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் ம.தி.மு.க. சார்பில் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu