திரைப்பட நடன இயக்குனர் ரகுராம் காலமானார்!
raguramசென்னை: பிரபல திரைப்பட நடன இயக்குனர் ரகுராம் இன்று மாரடைப்பால் காலமானார்.

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த ரகுராமுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சில வருடங்களுக்கு முன் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப்பின் அவர் குணம் அடைந்தார்.

இந்நிலையில் இன்று காலை ரகுராம் வழக்கம் போல் எழுந்து காலை 10 மணிக்கு சிற்றுண்டி சாப்பிட்டார். 11–30 மணி அளவில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருடைய உடலைப் பார்த்து மனைவி கிரிஜா, மூத்த மகள் சுஜாதா, மைத்துனிகள் கலா, பிருந்தா மற்றும் உறவினர்கள் கதறி அழுதார்கள்.

ரகுராமின் உடல் திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவருடைய வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. திரையுலக பிரமுகர்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

குடும்பம்

மரணம் அடைந்த ரகுராமுக்கு சொந்த ஊர், கும்பகோணம். மனைவி பெயர் கிரிஜா. இவரும் டான்ஸ் மாஸ்டர்தான். ரகுராம்–கிரிஜா தம்பதிக்கு சுஜாதா, காயத்ரி என்ற 2 மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் சுஜாதா, பரதநாட்டிய கலைஞர். காயத்ரி ‘விசில்’, ‘சார்லி சாப்ளின்’ உள்பட பல படங்களில் நடித்தவர். இப்போது, டான்ஸ் மாஸ்டராக பல படங்களில் பணிபுரிகிறார்.

எம்.ஜி.ஆர்–சிவாஜிகணேசன் காலத்தில் தொடங்கி, ரஜினிகாந்த்–கமல்ஹாசன் படங்கள் வரை டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர், ரகுராம். இவர், பிரபல பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் உறவினர். ரகுராமின் மனைவி கிரிஜாவின் தங்கைதான் டான்ஸ் மாஸ்டர் கலா.

1000 படங்கள்

64 வயதாகும் ரகுராம், சுமார் 50 ஆண்டுகளாக திரைப்படத்துறையுடன் தொடர்பு உடையவர். குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகமானார். ‘படிக்காத மேதை,’ ‘அருணகிரிநாதர்’ உள்பட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

சிறந்த நடன இயக்குனரான ரகுராம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 1,000 படங்களுக்கு மேல் நடனம் அமைத்து இருக்கிறார்.

‘விஸ்வநாதன் வேலை வேண்டும்’ என்ற தமிழ் படத்தையும், ‘பாக்யதேசா’ என்ற வங்காள படத்தையும் டைரக்டு செய்து இருக்கிறார்.ரகுராமின் மறைவுக்கு தமிழ் திரையுலகத்தின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல் தகனம்

அவருடைய இளைய மகள் காயத்ரி ரகுராம், ‘வை ராஜா வை’ என்ற படத்துக்கு நடனம் அமைப்பதற்காக ஜப்பான் சென்று இருக்கிறார். அவருக்கு ரகுராம் மரணம் அடைந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

காயத்ரி ரகுராம் சென்னை வந்து சேருவதற்கு தாமதமாகும் என்பதால், ரகுராமின் உடல் தகனம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu