நாட்டியப் பேரொளி என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகை பத்மினி செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று மாரடைப்பினால் காலமானார். திருமணத்திற்கு பின்னர் பல ஆண்டு காலமாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்த அவர் சமீபத்தில் தான் சென்னைக்கு திரும்பியிருந்தார். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழக திரையுலகம் நடத்திய கலை விழா தான் அவர் இறுதியாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி.
அழகும் திறனும் கொண்ட அவரது மரணம் பேரிழப்பு என்று தமிழக முதல்வர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த பத்மினி அவர்களின் தாய்மொழி மலையாளம். ஆரம்ப காலங்களில் தனது சகோதரிகள் லலிதா, ராகிணி ஆகியோருடன் இணைந்து பல படங்களில் இவர் நடனமாடி வந்தார்.
இவர் முதன்முதலில் நடித்த படம் இந்தியில் வெளியான கல்பனா என்ற திரைப்படம். தமிழில் என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த மணமகள் என்ற படம் தான் அவரது முதல் தமிழ்த் திரைப்படம்.
பிரபல நடிகை பத்மினி அவர்களின் மறைவு குறித்து தமிழோசையில் வெளியான குறிப்பினை நேயர்கள் கேட்கலாம்.