இந்தியாவின் பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் 12 டிசம்பர் சனிக்கிழமை இரவு, தனது 88வது வயதில் சென்னையில் காலமானார்.
சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த சுப்புலட்சுமி அவர்கள் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.
சுப்புலட்சுமி அவர்களின் உடலுக்கு இந்திய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழக மற்றும் தேசிய தலைவர்கள் மற்றும் கலைஞர்கள் சுப்புலட்சுமியின் மறைவுக்கு இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
இசைக்குயில் என்று அழைக்கப்பட்ட சுப்புலட்சுமி 1916 இல் மதுரையில் பிறந்தார்.
தேவதாசி பரம்பரையைச் சேர்ந்த இவரது தாயார் பெயர் சண்முகவடிவு.
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி(எம்.எஸ்.எஸ்) என்று அழைக்கப்பட்ட சுப்புலட்சுமி அவர்கள், தனது 10வது வயதிலேயே தனது முதலாவது இசைத்தட்டை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1940 இல் இவர் சதாசிவ ஐயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்தியாவின் நைட்டிங்கேல் என்று, இவர் இந்திய கவிஞர் சரோஜினி நாயுடுவால் வர்ணிக்கப்பட்டிருந்தார்.
மாகாத்மா காந்தியின் பிரார்த்தனைக் கூட்டங்களின் போது பக்திப்பாடல்களை பாடுமாறு இவர் காந்தியினால் பலதடவைகள் கேட்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பல பிராந்திய மொழிகளிலும் இவர் பாடியிருந்தார்.
1964இல் ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் இசைக்கச்சேரி நடத்தியுள்ளார்.
தனது நிதித்தேடல்கள் அனைத்தையும் இவர் தர்ம ஸ்தாபனங்களுக்கே வழங்கியிருந்தார்.
பாரதரத்னா விருது உட்பட பல உயர் விருதுகளையும் பெற்ற பெருமை இவரைச்சாரும்.