20ம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவரும், 1950 மற்றும் 60களில் ஹாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியுமாக திகழ்ந்த எலிசபெத் டெய்லர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானார்.
அவருக்கு வயது 79.
அவரது இளமையின் உச்சக்கட்டத்தில், உலகின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவர் என்றும் மிகவும் அழகான நடிகைகளில் ஒருவர் என்று பெயர் பெற்றிருந்தார் டெய்லர்.
பிரிட்டனில் வாழ்ந்த அமெரிக்கப் பெற்றோர்களுக்குப் பிறந்த எலிசபத் டெய்லர் தனது 12வது வயதில் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
எலிசபத் டெய்லர் நடித்த படங்களில் நேஷனல் வெல்வெட் (National Velvet, கிளியோபாட்ரா (Cleopatra) மற்றும் ஹூ இஸ் அப்ரெய்ட் ஒப் வர்ஜீனியா ஊல்ப் (Who is afraid of Virginia Wolf) ஆகியவை பிரபலமானவை.
அவரது திரையுலக வாழ்க்கை, 1950களிலும் 60களிலும் உச்சத்தை எட்டியது. 1958லிருந்து 1961 வரை நான்கு முறை அவர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
ஆஸ்கர் விருது
ரெயின் ட்ரீ கௌண்ட்டி (Rain tree county), கேட் ஆன் அ ஹாட் டின் ரூப் (Cat on a hot tin roof), சடன்லி லாஸ்ட் சம்மர் (Suddenly last summer) ஆகிய மூன்று படங்களுக்கு ஆஸ்கார் நியமனங்கள் பெற்றும் பரிசு கிடைக்கவில்லை.
ஆனால் கடைசியாக அவரது நான்காவது முயற்சியில், பட்டர்பீல்ட் 8 (Butterfield 8) என்ற படத்தில் அவர் நடித்ததற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.
அவரது இரண்டாவது ஆஸ்கார் விருது, 1967ம் ஆண்டைய படமான, ஹூ இஸ் அப்ரெய்ட் ஒப் வர்ஜீனியா ஊல்ப் (Who is afraid of Virginia Wolf) என்ற படத்திற்காகக் கிடைத்தது.
இதில் அவர் அவரது கணவரான ரிச்சர்ட் பர்ட்டனுடன் நடித்திருந்தார்.
வித்தியாச மணவாழ்க்கை
ஆனால் எலிசபத் டெய்லர் அவரது திரைப்படங்கள் மூலம் பெற்ற பிரபல்யத்துக்கு நிகராக, அவரது வித்தியாசமான மணவாழ்க்கை மூலம் பெற்றார் எனலாம்.
அவரது சுவாரஸ்யமான தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எட்டு முறை திருமணம் செய்துகொண்டார்.
இதில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் பர்ட்டனை இரண்டு முறை திருமணம் செய்து, இரு முறை விவாகரத்தும் செய்தார் எலிசபத் டெய்லர்.
அவரது திரையுலகப் புகழ் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தவிர, எய்ட்ஸ் தொற்றுக்கெதிராகப் பணிபுரியும் தொண்டு நிறுவனங்களுக்கு அவர் செய்த உதவியும் அவரை எப்போதும் பொதுமக்கள் கவனத்திலேயே வைத்திருந்தது.
திரையுலகின் கனவு ராணியாகத் திகழ்ந்தாலும், அவரது வாழ்க்கையில் எலிசபத் டெய்லர் தொடர்ந்து பல உடல் நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.
மூளையில் கட்டி ஒன்றுக்காக அறுவை சிகிச்சை, பிறகு மூட்டுவாதம் போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொண்ட அவர், கடந்த ஆறு வாரங்களாக இருதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.