பார்வதியம்மாள் காலமானார்
parvathiammalவிடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதியம்மாள் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் பார்வதியம்மாள் காலமானதாக வைத்தியசாலைக்குப் பொறுப்பான மருத்துவர் மயிலேறும் பெருமாள் தெரிவித்தார்.

கடந்த பத்து வருடங்களாக பாரிசவாதம், சர்க்கரை நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பலநாட்களாக சுயநினைவு இழந்த நிலையில் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவர் மயிலேறும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

81 வயதான பார்வதியம்மாளுக்கு சில காலம் மலேசியாவில் சிகிச்சையளிக்கப்பட்டது. அவருக்கு அங்கு சிகிச்சையளிப்பதில் எழுந்த நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, மேலதிக சிகிச்சைகளுக்காக இந்தியா அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அனுமதி மறுத்த இந்திய அரசு, அவரை அவர் சென்ற விமான நிலையத்திலேயே மலேசியாவுக்குத் திருப்பியனுப்பியது.

பின்னர், அவருக்கு சிகிச்சைக்காக இந்தியா வர அந்நாட்டு அரசு நிபந்தனையடிப்படையில் அனுமதியளிக்க முன்வந்த போதிலும், அவரது குடும்பத்தினர் அதற்கு உடன்படவில்லை.

அத்தோடு, அன்றைய சூழ்நிலையில் அவர் ஒரு அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும் அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை.

இந்த நிலையில், பிரபாகரனின் தாயார் அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்கையளிக்கப்பட்டு வந்தது.

அங்கு, அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

அங்கு அவரது உடல்நிலை சற்று தேறியதையடுத்து, வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கே அவர் மாற்றப்பட்டார்.

கடந்த சில வாரங்களாக சயநினைவு இழந்திருந்த அவர், ஞாயிறு அதிகாலை காலாமானார்.

கனடா, டென்மார்க், இந்தியா ஆகிய நாடுகளில் வசித்துவரும் இவரது மூன்று பிள்ளைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தமது தாயாரைப் பார்ப்பதற்கு வரமுடியாதிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பார்வதியம்மாளை பராமரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வதியம்மாளின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் தீருவில் மயானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu