சாய்பாபா காலமானார்
Sathya_Sai_Babaஇந்தியாவின் பெருமதிப்புக்குரிய ஆன்மிக குருக்களில் ஒருவரான சத்ய சாய்பாபா தனது 84ஆம் வயதில் காலமானார்.

சாய்பாபாவின் சொந்த ஊரான ஆந்திர மாநிலத்தின் புட்டபர்த்தியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மாரடைப்பால் உயிர் பிரிந்தது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் முக்கியப் பிரமுகர்கள் வேறு பலரும் மறைந்த சாய்பாபாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோடிக்கணக்கானோரை வழிநடத்திய ஆன்மிகத் தலைவர் அவர் என்றும், அவருடைய மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

புட்டபர்த்தியில் அவருடைய பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கூடி வருகின்றனர்.

இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டுத்துறை நட்சத்திரங்கள் போன்றோரும் சாய்பாபாவின் பக்தர்கள் ஆவர்.

தனது மறைவு குறித்து முன்னரே பேசியிருந்தவர் பாபா. உடல் நிலையானது அல்ல. இந்த உடலை விட்டு தான் மறைந்தாலும் தனது ஆத்மா வாழும் என்று பல வருடங்களுக்கு முன்பே தனது பக்தர்களுக்கு பாபா விளக்கியிருந்தார்.

தனது வாழ்நாள் முழுக்கவும் ஒன்றுக்கொன்று நேரெதிரான உணர்வுப் பெருக்குகளைத் தூண்டிய ஒரு நபராக சாய்பாபா விளங்கிவந்துள்ளார் என்பதில் ஐயமில்லை.

தன்னுடைய பக்தர்களைப் பொறுத்தவரை, சாய்பாபா கடவுளின் அவதாரம், மனித உருவில் மண்ணில் தோன்றிய தெய்வப் பிறவி அவர். இந்தியாவின் ஏழ்மைமிகு மூலைகளில் ஒன்றுக்கு இறைவனின் அருட்செய்தியைக் கொண்டுவருவதற்காக பூமியில் உதித்தவர் அவர்.

ஆனால் தன்னுடைய விமர்சகர்களுக்கோ, அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி, கண்கட்டு வித்தைக்காரர், தன் மீதான சர்ச்சைக்குரிய பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளை அரசியல் தலைவர்களிடையே தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி விசாரிக்கவிடாமலே செய்தவர்.

அவர் யாராக வேண்டுமென்றாலும் இருக்கட்டும், ஆனால் இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மிக குருவாக அவர் தனது வாழ்நாளில் உயர்ந்திருந்தார் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

சிறிய உடலமைப்பு, அதிர்ந்து பேசாத சாந்தம், முழு நீள காவி அங்கி, எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய பந்துப் பொதியான சுருள் முடி என வலம் வந்த பாபா ஏழைகள், பணக்காரர்கள், உள்நாட்டவர்கள் வெளிநாட்டவர்கள் இந்துக்கள், பிற மதத்தினர் என்றும் பல்தரப்பட்டவர்களையும் ஈர்த்து இருந்தார் என்பதிலும் ஐயமில்லை.

ஆந்திர மாநிலத்தில் உள்ள தள்ளிப்போன ஓர் இடமான புட்டபர்த்தியில் 1926ஆம் வருடம் ஒரு ஏழைக் குடும்பத்தில் சத்யநாராயண ராஜுவாகப் பிறந்தார் பாபா. அவருடைய குழந்தைப் பருவத்திலேயே அவருடைய தெய்வத்தன்மைக்கான பல அடையாளங்கள் இருந்தமைக்கு நிறைய கதைகள் இருக்கின்றன.

இந்துக்களாலும் முஸ்லிம்களாலும் ஒருசேர நேசிக்கப்பட்டிருந்த 19ஆம் நூற்றாண்டின் புகழ்வாய்ந்த ஆன்மிக குருவான சீரடி சாய்பாபாவின் மறுபிறப்பு தான் என்று தனது 13ஆவது வயதில் சத்ய சாய்பாபா அறிவித்திருந்தார். இந்த பெயர் மாற்றம் அவருடைய வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

தனது கிராமத்தில் சாய்பாபா அமைத்த பிரசாந்தி நிலையம் என்ற ஒரு ஆசிரமத்துக்கு ஏராளமான பக்தர்கள் வரத் துவங்கினர்.

அதன் பின்னர் இந்த கிராமம் ஏராளமான விடுதிகளும், ஓய்வுமையங்களும், பள்ளிக்கூடங்களும் பல்கலைக்கழகமும், சிறப்பு சிகிச்சை மருத்தவமனையும், ஏன் தனியார் விமான நிலையமும் கொண்ட ஒரு ஆன்மீகத்துக்கும் சேவைக்குமான தலைமையகமாக மாறிப்போனது.

ஆன்மிகத்தை கோட்பாட்டு ரீதியாக சாய்பாபா அணுகியிருக்கவில்லை. இதனால் அவரது சித்தாந்தம் உலகெங்கும் பிரபல்யம் அடைந்ததோடு, ஏராளமானவர்களை அவருக்கு பக்தர்களாகப் பெற்றுத்தந்தது.

ஏராளமான பக்தர்களின் அன்பையும், விசுவாசத்தையும் போற்றுதலையும் சாய்பாபா பெற்றிருந்தார் என்பது நிச்சயம்.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu