பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்
Ravichandranதமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 71.

சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட அவரது உடல் நிலை மிகவும் மோசமானதால், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செயற்கை சுவாசக் கருவிகளும் பொருத்தப்பட்டன. உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி திங்கட்கிழமை இரவு அவர் மரணம் அடைந்தார்.

தமிழ்த் திரைப்படவுலகில் 1970களில் முன்னணி கதாயகர்களுள் ஒருவராகத் திகழ்ந்த ரவிச்சந்திரன், இயக்குனர் ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை’யில் அறிமுகமானவர். ‘இதயக் கமலம்’,’கௌரி கல்யாணம்’, ‘குமரி பெண்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

ஆபாவாணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘ஊமை விழிகள்’ படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தவர். அதன்பின், உறுதுணை கதாப்பாத்திரங்களில் வலம் வந்தார். ரஜினிகாந்துடன் ‘அருணாசலம்’, கமல்ஹாசனுடன் ‘பம்மல் கே சம்பந்தம்’ ஆகிய படங்களில் நடித்தார்.

மறைந்த நடிகர் ரவிச்சந்திரனுக்கு விமலா என்ற மனைவியும், பாலாஜி, அம்சவரதன் என்ற 2 மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.

நடிகர் ரவிச்சந்திரனின் மறைவுக்கு தமிழ்த் திரைப்பட கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu