பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இலக்கிய மாணவரான கவிஞர். நா.முத்துக்குமார் ‘பட்டாம் பூச்சி விற்பவன்’ என்ற கவிதை தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமானவர். அதன் பிறகு பல்வேறு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்ற சிறப்புக்குரியவர்.
தொண்ணூறுகளின் இறுதியில் தமிழ்த் திரைப்பட துறையில் ‘வீர நடை’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான நா. முத்துக்குமார்,மின்சாரக் கண்ணா, ஹலோ,வெற்றிக்கொடிகட்டு உள்ளிட்ட 200 திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.
தங்கமீன்கள், சைவம் திரைப்படங்களின் பாடல்களுக்கு தேசிய விருதும் பெற்றவர் நா.முத்துக்குமார் என்பது குறிப்பிடத்தத்தக்கது.
”’ஆனந்த யாழை…’ பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து நா.முத்துக்குமார் பேசுகையில், ”விருது செய்தி வந்த 10-வது நிமிடத்தில் யுவனிடம் இருந்து வாழ்த்துச் செய்தி. ‘உங்களால்தான் இந்த விருது’னு நன்றி சொன்னேன். ‘உங்கள் வரிகளுக்குக் கிடைத்த விருது’ என்றார். ‘உடலையும் உயிரையும் தனியா பிரிக்க முடியாதே. உங்களுக்கும் கிடைச்சிருக்கணும். அடுத்த முறை ‘தரமணி’க்காகச் சேர்ந்து வாங்குவோம்’ என்றேன். சந்தோஷப்பட்டார். நான் எப்பவும் என் ஞானத்தந்தை வரிசையில் ராஜா சார், பாலுமகேந்திரா சார், அறிவுமதி அண்ணன் இவங்களை வெச்சிருப்பேன். ராஜா சாரைப் பார்த்ததுமே, ‘தேசிய விருதா… வாழ்த்துகள்’னு மகிழ்ந்தார். அது மறக்க முடியாத பாராட்டு.
என் நண்பன் ராம் தன் ‘கற்றது தமிழ்’ படத்தை தேசிய விருதுக்கு அனுப்பத் தவறிட்டான். ‘தங்க மீன்கள்’ மூலம் அந்தக் குறை நீங்கி இருக்கு. நண்பனா எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றார் நட்பான குரலில்.