நகைச்சுவை நடிகர் குமரி முத்து உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.
நகைச்சுவை நடிகரான 77 வயது குமரி முத்து, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி இன்று காலை குமரி குத்துவின் உயிர் பிரிந்தது.
நடிகர் குமரி முத்து, 1978 ஆம் ஆண்டு இவள் ஒரு சீதை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
தனது வித்தியாசமான சிரிப்பினால், மக்களை சிரிப்பூட்டி பிரபல்யமானவர். ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர், 1960களிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜனி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் குமரி முத்து நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் சினிமாவில் புகழ்பெற்ற நட்சத்திமாக திகழ்ந்த குமரி முத்து, அரசியல் கட்சியான தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டு, நட்சத்திர பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.