”மெல்லிசை மன்னர்” எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்!




ms-vishwanathanசென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த இசையமைப்பாளர் எம்.எஸ்., விஸ்வநாதன், இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார்.

87 வயதான பிரபல திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 வாரத்திற்கு முன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் உடல், சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி சடங்குகள் நாளை காலை 10 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மாயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எம்.எஸ்.விஸ்வநாதன் வாழ்க்கை குறிப்பு…

எம்.எஸ்.விஸ்வநாதன் 1928 ஜூன் 24 ஆம் தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். எம்.எஸ்.விஸ்வநாதன், 1945 முதல் 2015 வரை 60 ஆண்டு காலம் திரைத்துறையில் கோலோச்சியவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 1,200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

1953ல் வெளிவந்த ‘ஜெனோவா’ படத்துக்கு முதன் முதலாக இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தியுடன் இணைந்து 700 படங்களில் இசை அமைத்துள்ளார். 500 படங்களுக்கு மேல் தனியாக இசை அமைத்துள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசன், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ‘மெல்லிசை மன்னர்’ என்ற பட்டத்தை வழங்கி பெருமை சேர்த்தார். ‘நீராரும் கடலுடுத்த’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மோகன ராகத்தில் இசை கோர்த்துள்ளார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

இசை அமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, கங்கை அமரன் பாடல்களில் பாடிய எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் பாடல்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்.

தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருதும் பெற்றவர்.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu